Friday, June 20, 2008

புலம்பல்

பதவி இழந்த அரசியல்வாதியாய்
புலம்பிக்கொண்டிருக்கிறது உன் தலையனை...
உன்னுள் நான் வந்ததினால்...


-தனிமைரசிகன்.

Monday, April 7, 2008

எனது தேசத்தாயின் அவலம்...

இரண்டு குழந்தைகள் பெற்ற தாய்,
இரண்டு குழந்தைகளும் அழும் போது
ஒரு குழந்தைக்கு ஒரு மார்பகம் என்று தந்திருப்பாள்...
அதே மூன்றாவது குழந்தை பிறந்து
அதுவும் பசியால் அழுதால்,
அவள் யோசிப்பாளா இன்னொரு மார்பகம் வேண்டும் என்று???

இதோ என் இந்திய தாய்க்கு பிரிவினை பிரச்சனை...
அவளுக்கு 26 குழந்தைகள்...
குழந்தைக்கொரு ஆறு என்றிருந்திருந்தால்...
அவளுக்கு சந்தோஷம் தான்...
இன்று தமிழ் நாடென்னும் குழந்தையும்...
கர்நாடகம் எனும் குழந்தையும் இப்படி
அவளிடம் சுரக்கும் பாலுக்காக
தங்கள் ரத்தத்தை வழிய விட்டு கொண்டிருக்க மாட்டார்கள்...

மூடர்களே தாயின் மார்பில் சுரக்கும் பால்
எந்த குழந்தைக்கு சொந்தம் எனும் பிரச்சனை வந்தால்
தாய்க்கு இழுக்கு இல்லையா???

இந்தியத் தாயே எங்களை மன்னிபாயாக...

-தனிமைரசிகன்.

Thursday, March 20, 2008

உனக்கான என் முதல் பாடல்...

பல்லவி:
காதலெனும் போர்வாள் கொண்டு வந்தவள் நீயடி...
காதலி என்று உயிரை கொன்று சென்றாய் ஏனடி???
நீ எனக்கு இல்லை என்றால் நெஞ்சம் தாங்குமா???
உன் துணை இல்லை என்றால் என் விழிகள் தூங்குமா???


சரணம் 1:
சிறு பிள்ளையாய் நான் இருந்தேன், ஒரு பட்டாம்பூச்சியாய்
நீ வந்தாய்...
உன் திசை தேடி நான் இன்று பறக்கிறேன்...
இருட்டிலே நான் நடந்தேன், இடையில்லா ஒளியாய்
நீ வந்தாய்...
உன் நிழல் தேடி நான் இன்று நகர்கிறேன்...

உன்தன் நெஞ்சை கொள்ளை கொள்ள நானும் வந்தேன்...
உன் ஒரு துளி பார்வையால் என்னை நீ கடத்தி சென்றாயே...

நீ எனக்கு இல்லை என்றால் நெஞ்சம் தாங்குமா???
உன் துணை இல்லை என்றால் என் விழிகள் தூங்குமா???

சரணம் 2:
வேண்டாம் என்று விலகிச்சென்றேன் குழந்தை போல என் விரல் பிடித்தாய்...
வேண்டும் என்று உனக்காக வந்தேன் எதிரியின் வாளாய் வீழ்த்திச் சென்றாய்...
விரல்கள் சேர்க்கையில் விழிகள் மொத்தம் கனவுகள் தந்தாய்...
விட்டு பிரிகையில் அந்த கனவுகளை கழுவ கண்ணீர் தந்தாய்...

வரமென்னும் போர்வைக்குள் ஒளிந்து வந்த சாபம் தான் இந்த காதலோ???
அந்த சாபம் தன்னை வாங்கியபின் வாழ்தலும் இங்கே சாதலோ???


நீ எனக்கு இல்லை என்றால் நெஞ்சம் தாங்குமா???
உன் துணை இல்லை என்றால் என் விழிகள் தூங்குமா???


-தனிமைரசிகன்.


Sunday, March 16, 2008

மென்மை...

உன் கூந்தலில் இருந்து
திருடிய வாசத்தை தென்றல்
என் வீட்டு தோட்டத்தில்
தவறவிட்டு விட்டது போலும்...
வழக்கத்துக்கு மாறாக
அதிகமாய் மனக்கின்றன
என் தோட்டத்து மலர்கள்...
தென்றல் தீண்டியது கூட தெரியாமல்
அவ்வளவு மென்மையாய்
உறங்குகிறாய் நீ...


-தனிமைரசிகன்.

மாதராய் பிறப்பதற்கு...

வாடை,
தென்றல்,
புயல்,
இப்படி பல பரிமாணங்கள் காற்றுக்கு...

மழை,
ஆறு,
கடல்,
இப்படி பல பரிமாணங்கள் நீருக்கு...

தீ,
அக்னி,
அனல்,
இப்படி பல பரிமாணங்கள் நெருப்புக்கு...

மண்,
மனை,
பூமி,இப்படி பல பரிமாணங்கள் நிலத்திற்கு...

ஆகாயம்,
வான்வெளி,
மேகம்,
இப்படி பல பரிமாணங்கள் வானத்திற்கு...

தாய்,
சகோதரி,
தோழி,
மனைவி,இப்படி பல பரிமாணங்கள் பெண்ணிற்கு...

ஐம்புலன்கள் இல்லாமல் உயிர் வாழ முடியாதென்று
யாரோ கூறினார்களாம்...

நான் அதை மாற்ற விரும்புகிறேன்...
ஆறாம் புலனான பெண்ணில்லை என்றாலும்
வாழ முடியாதுதான்...

மாதராய் பிறப்பதற்கு மா தவம் செய்திட வேண்டுமாம்...
நான் அப்படி பிறக்க விரும்பவில்லை...
நான் நானாக பிறந்து
உன்னை மீண்டும் உணர வேண்டும் பெண்ணே....

பெண்கள் தின நல் வாழ்த்துக்கள்...

-தனிமைரசிகன்.

கவிதை புத்தகமாய்...

உன் விழிகளுக்கு மட்டும்தான்
ஈர்ப்புவிசை என்று நினைத்திருந்தேன்...
பின்புதான் உணர்ந்தேன்
உன் புன்னைகைக்கு கூட ஈர்ப்பு அதிகமென்று...

உன்னை பற்றி எழுத வேண்டாமென்று
எவ்வளவோ முயற்சி செய்கிறேன்...
அணையை உடைக்கும் வெள்ளம்போல்
என் பேனா முனையை உடைக்கிறது
உன் எண்ணங்கள்...

நீ ஓவ்வொரு முறை என்னை பார்க்கும்போது
மொழிகள் தொலைத்தாலும்...
உன் ஒரு நொடி மௌனம் உணர்த்திவிடும்
உன் எண்ணங்களை...
உன் புன்னகை உணர்த்திவிடும் ஆயிரம் காவியத்தை...

உன் பெயருக்கு என் பேனாவும் டைரியும்
நன்றி சொல்கின்றன...
அவை ஒன்று சேர உன் பெயர் மட்டும்
காரணமாக இருப்பதால்...

உன்னை மயக்குவதற்காக இங்கு
நான் வார்த்தைகளை மாற்றவில்லை...
உன் பெயர் கண்டு மயங்கியதால்
வார்த்தைகள் கவிதையாகின...

நீ என்னை பற்றி யோசிக்கும் நிமிடங்களை
நான் இந்த உலகம் முழுதும்
உன் பெயரை கிறுக்க எடுத்துக்கொண்டேன்...
என்ன அதிசயம் இந்த உலகமே
கவிதை புத்தகமாய் மாறிவிட்டது...

-தனிமைரசிகன்.

உன் பிரிவு...

உன் பிரிவை தாங்காமல் உனக்கு
என் நினைவுகளை தூதனுப்ப முடிவு செய்தேன்...

தென்றலிடம் சொல்லி அனுப்பலாம் என்று நினைத்தேன்..
நீ இல்லாத காரணத்தினால்
தென்றலும் விடுமுறையில் சென்றுவிட்டது...

நிலவிடம் சொல்லி அனுப்பலாம் என்று நினைத்தேன்...
அது உன்னை தேடி அலைந்து கொண்டிருப்பதாக
தகவல் வந்தது...

என் தோட்டத்தில் உள்ள மலர்களிடம்
சொல்லி அனுப்பலாம் என்று நினைத்தால்...
உன் வருகை இல்லாமல்
என் தோட்டத்தில் மலர்கள் மலரவே இல்லை...

கடைசியில் என் இதயத்தை தூதனுப்பலாம்
என்று முடிவு செய்தேன்...
அதனிடம் பேசும் போதுதான் உணர்ந்தேன்
அது என்னை உன்னிடம்
தூதனுப்ப முடிவு செய்திருகிறதென்று...

-தனிமைரசிகன்.

நீ இல்லை என்று சொன்னால்...

நீ இல்லை என்று சொன்னால்...
நான் தற்கொலை செய்துகொள்ள மாட்டேன்,
அது உன்னை நான் கொள்வதற்கு சமம்.
உன்னை கொலை செய்யமாட்டேன்,
அது என் தற்கொலைக்கு சமம்.
நீ இல்லை என்று சொன்னாலும்
வாழ்ந்துகொண்டுதான் இருப்பேன்,
என் காதலை காதலித்துக்கொண்டு...

-தனிமைரசிகன்.

தழும்புகள்...

உன் நினைவுகளே வேண்டாம் என்று
என் இதய சுவர்களில் மாட்டி இருந்த
உன் புகைப்படங்களை தூக்கி எறிந்தேன்...
ஆனால் இன்னும் வலித்துக்கொண்டுதான் இருக்கிறது
உன் புகைபடங்களை மாட்டி வைப்பதற்காக
அடிக்கப்பட்ட ஆணிகளின்
தழும்புகள்...

-தனிமைரசிகன்.

வறுமை...

தரையில் படுக்க வைத்தால்
குழந்தைக்கு வலிக்குமே என்று
தன் மார்பின் மீது
படுக்க வைத்துக்கொண்டாள்
அந்த தாய்...
இருந்தும் குழந்தை அழுதது...
தாயின் மார்புக்கூடு குத்தியதால்...
சதையே இல்லாத மார்பில்
பால் மட்டும் எப்படி சுரக்கும்...???

-தனிமைரசிகன்.

எனக்கான இரங்கல்...

உனக்கு தெரியாமல் உன்னிடம் இருந்து
நான் திருடிய உன் புகைப்படம்...
நாம் விளையாடுகையில் உடைந்த
உன் வளையல் துண்டுகள்..
நீ பழையது என்று விட்டு விட்ட
உன் கைக்குட்டை...
காற்றில் மிதந்து வந்த
நீ சிக்கெடுத்த கூந்தல்...
நீ சுவைதப்பின் தவறவிட்ட
மிட்டாய் காகிதம்...
நீ வெட்டி எரிந்த நகத்துண்டுகள்...
நீ முகம் கழுவுகையில்
கண்ணாடியில் ஒட்டி வைத்த ஸ்டிக்கர் பொட்டு...
நீ பயணம் முடிந்ததும் தூக்கி எரிந்த பயணச்சீட்டு...
உன் கொலுசில் இருந்து தவறிய வெள்ளி முத்து...
இவைகளோடு உனக்காக
நான் சேர்த்துவைத்த கவிதைகள்...
எல்லாம் காத்திருக்கின்றன
உன் வருகையை எதிர் பார்த்துக்கொண்டு...
எனக்கான இரங்கல் கூட்டத்தில்...

-தனிமைரசிகன்.

உன் நினைவின் விளையாட்டு...

மௌனத்தின் பிம்பம் கலையாத
தனிமையான அறையில் இருக்கிறேன்...
இரத்தம் ருசிக்க காத்திருக்கும்
எதிரியின் போர்வாளாய்
என் நெஞ்சை கிழிக்கிறது
உன் நினைவு...
குருதி படிந்த தேகமாய் சாய்கிறேன் நான்...
தாய்மையின் பரிவோடு
என்னை மடியில் தாங்குகிறது
உன்னுடைய அதே நினைவு...
இன்னமும் புரியவில்லை
உன் நினைவின் விளையாட்டு...

-தனிமைரசிகன்.

ஏன் திரும்பி பார்க்கிறாய்???

சுடுகாட்டில் பிணத்திற்கு கொள்ளி வைத்தவர்கள்
அதை திரும்பி பார்க்கக்கூடாதாம்...
காதலென்னும் சுடுகாட்டில்
என்னை எரித்து விட்டு செல்லும் போது
நீ மட்டும்
ஏன் திரும்பி திரும்பி பார்க்கிறாய்???
மீண்டும் உயிர்த்தால் உன் விழி கொண்டு என்னை சுட்டெரிக்கவா?

-தனிமைரசிகன்.

Friday, March 7, 2008

ஏக்கம்...

என் தோட்டத்தில்
எத்தனை மலர்கள் இருந்தாலும்...
என் மனம் ஏங்குகிறது
நீ சூடி தூக்கியெறியும்
அந்த வாடிய மலருக்காக...

-தனிமைரசிகன்.

நீ இன்று இல்லை...

நீ என்னோடு இருக்கும் போது
என் விழிகளை
கனவுகளால் கழுவிக்கொண்டிருந்தேன்...
நீ இன்று இல்லை...
அதே விழிகளை
என் கண்ணீரால் கழுவிக்கொண்டிருகிறேன்...

-தனிமைரசிகன்.

முத்தம்

"நீ அழும்போதெல்லாம் முத்தம் வேண்டுமா?"
என்று என்னை நீ கேட்டாய்...
நான் அழும்போதெல்லாம் நீ தர வேண்டாம்...
என் கண்ணீர் நீ தந்த முத்தத்தை
அழிக்கும் போதெல்லாம் ஒரு முத்தம் கொடு
உன் உதடுகளால்
என் கண்ணீர் அழியட்டும்...

-தனிமைரசிகன்.

என் பிறப்பும் இறப்பும்...

உன் வியர்வை துளியால் முகம் துடைத்தால்
நான் மீண்டும் ஒரு முறை பிறக்கிறேன் !!!
ஆனால் உன் தேகம் அங்கே வியர்த்தாலோ
நான் மீண்டும் மீண்டும் இறக்கிறேன்...

-தனிமைரசிகன்

வெட்கம்

உன் நெற்றிக்கு எதற்கடி செந்தூரம்???
திருநீர் வைத்து நீ சற்று வெட்கப்படு...
அது சிவந்து விடும்
அந்த மாலை நேர சூரியனை போல்...

-தனிமைரசிகன்.

போராட்டம்...

இரவு உறங்கச்செல்லும் முன்
ஜன்னல் கதுவகளை சாத்திவிடு...
இல்லை என்றால் நிலா
உன் போர்வைக்குள் இடம் கேட்க்கும்...
ஏற்கனவே நான் அதற்காக
வெகு நாட்கள் போராடிக்கொண்டிருகிறேன்...

-தனிமைரசிகன்.