Tuesday, November 19, 2013

மழை

உன் மேனியை நீராடையால்

அலங்கரிக்க வானம் கொண்ட

நிர்வாணக் கோலம் தான்

மழையோ?

இல்லை உன் முகத்தை படம் எடுக்க முடியாமல்

வானம் என்னும் கண்ணாடி உடைந்து

சிந்தும் துகள்கள்தான் மழையோ?

இல்லை

சூரியன் உன்னோடு

விளையாட நீர்த்துளிகளாய்

அவதரித்தது தான் மழையோ?



***********************************************


யாருன்னை முதன் முதலாய்

மழையால் நனைப்பதென

மேகங்கள் கொள்ளும் ஊடல் தான்

இடியின் சத்தமோ???



***********************************************


வெகு நேரமாய் மழை துளியை

தாங்கி நிற்கும் இலை தன்னை

காற்று தீண்டியதும் தவறவிடும்

அந்த மழைத்துளியை...

நெடுங்காலம் நான் தாங்கி நிற்கும்

காதல் தன்னை உன் பார்வை தீண்டியதும்

தவறவிடும் என் மனத்துளியை போல்...


*************************************************


மழையில் நனைந்த உன் கூந்தலை

நீ வேகமாய் துவட்டிக்கொண்டிருக்க

தன் மீது கோவம் கொள்கிறாய் என்று

இன்னமும் வேகமாய் அழுகிறது மழை...


*************************************************


நீ சாலையில் நடந்து செல்கையில்

பெய்யும் மழை துளிகள் சுமந்து வரும்

உன் பிம்பங்களில் மோதி மோதியே

நெஞ்சம் நனைகிறது என் காதல்...


************************************************


உன் வீட்டு ஜன்னலில்

கைகள் நீட்டியபடியே

மழைத்துளிகளை நீ சேகரித்து

விளையாடிக் கொண்டிருந்தாய்

உன் செய்கையை கண்டு

என் இதயம் காதலை சேகரித்து மனம்

வினையாகிக் கொண்டிருப்பதை அறியாமல்...


***************************************************


முத்தெடுக்க முக்குளிக்க வேண்டுமாம்

நான் முத்தேடுகிறேன் நீ கால் நனைத்தும் நனைக்காமலும்

விளையாடி சென்ற தேங்கிய மழை நீரில்...

- தனிமைரசிகன்.

No comments: